Sunday, December 18, 2011

முள்ளங்கிப் புட்டு


தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 4
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 6
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தாளிக்க



செய்முறை:
  • முள்ளங்கியைத் தோலை நீக்கிவிட்டு, நீளவாக்கில் சீவிக்கொள்ளவும்.
  • 15 நிமிடம் கழித்து நன்கு முள்ளங்கியை நன்கு பிழிந்து சாறை நீக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
  • பொட்டுக்கடலை, சோம்பு இவ்விரண்டையும் மிக்ஸியில் அரைத்துப் பொடி பண்ணவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும், முள்ளங்கியையும் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  • வாணலியை மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.
  • சற்று சேரம் கழித்து, முள்ளங்கி நன்கு வெந்ததும், பொட்டுக்கடலை சோம்புப் பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
  • 5 நிமிடம் கழித்து வாணலியை இறக்கவும்.

    குறிப்பு: தேவையெனில், தேங்காய்த் துறுவல் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.

Tuesday, October 18, 2011

கல கலா / சுருள்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 200 கிராம்
வெண்ணெய்- 1 தேக்கரண்டி
சீனி - 1/4 கோப்பை
தேங்காய்ப்பால்(கெட்டியானது) - 1/4 கோப்பை
உப்பு - 1/4 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 250 மிலி.
பற்கள் அகலமான சீப்பு(புதியது)
அல்லது முட்கரண்டி (fork)    - 1

செய்முறை:

  • மைதா மாவுடன் உப்பு, சீனி, வெண்ணெய், தேங்காய்ப்பால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசையவும்.
  • சுமார் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • 3 மணி நேரம் போனதும், மாவு சற்று மென்மையாக இருக்கும்.
  • சிறிய சிறிய உருண்டைகளாக (சிறிய கோலிக்குண்டு அளவில்) உருட்டிக் கொள்ளவும்.
  • சீப்பு, அல்லது முட்கரண்டியின் பின் இந்த உருண்டையை வைத்து மெதுவாக ஒரு பக்கமாக அழுத்தி இழுக்கவும்.
  • பின் அதைக் கையில் எடுத்து இடது கை ஆட்காட்டி விரலின் நுனியில் சுருட்டவும்.
  • இரண்டு முனைகளையும் சேர்த்து மெதுவாக அழுத்தவும்.


 

  • பின் நடுவில் ஒட்டா வண்ணம் கவனமாக அதை எடுத்துத் தட்டில் வைக்கவும்.
  • எல்லா உருண்டைகளையும் சுருளாகச் செய்து கொள்ளவும்.


  • வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் இச்சுருள்களை கொஞ்ச்ம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

  • இன்னொரு பாத்திரத்தில் சீனியுடன் 2 - 3 மேசைக்கரண்டி மட்டுமே தண்ணீர் கலந்துஅடுப்பில் வைக்கவும்.
  • சீனி கரையும் வரை நன்கு கிளறவும்.
  • சீனிப்பாகு நன்கு சூடேறி நிறம் பழுப்பு வெள்ளையாக மாறும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • பொரித்தெடுத்த சுருள்களை அப்பாத்திரத்தில் போட்டு சீனிப்பாகுடன் நன்கு கலக்கவும்.
  • சூடாக இருக்கும் பாகு, சுருளைச் சுற்றி எளிதாகப் பற்றிப் பூத்து நிற்கும். 


கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

Sunday, October 16, 2011

புளி மிளகாய்

தேவையான பொருட்கள்:

வெள்ளை மிளகாய் - 150 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 கோப்பை
சமையல் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு



செய்முறை:
  • வாணலியைக் காய வைத்து வெந்தயம் வறுத்தெடுக்கவும். பின் அதைப் பொடி செய்து வைக்கவும்.
  • வாணலியில் சமையல் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளிக்கவும்.
  • காம்புகள் கிள்ளிய வெள்ளை மிளகாயைச் சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • மிளகாய்த்துண்டுகளை எண்ணெயில் போட்டுச் சிறு தீயில் வதக்கவும்.
  • சுருள வதங்கியதும், கெட்டியான புளிக்கரைசலைச் சேர்த்துக் கிளறிவிடவும்.
  • உப்பு, மஞ்சள் பொடி, பொடித்த வெந்தயம் சேர்த்துக் கிளறவும்.
  • பச்சை வாசம் போனதும், நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:


  • வெல்லத்தின் சுவை புளியுடன் ரசிப்பவர்கள் சிறிதுவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • செய்தவுடன் இருப்பதைவிட, ஊற ஊறச் சுவை அதிகமாகும்.
  • வெள்ளை மிளகாய்க்குப் பதிலாக, பச்சை மிளகாயும் உபயோகிக்கலாம்.
கற்றுக் கொடுத்தது: தோழியின் வீட்டில் பள்ளிக்காலத்தில் சுவைத்த நினைவு + இணையம்... இவை தந்த தைரியத்தில் சொந்தமான முயற்சி

Sunday, August 7, 2011

வெள்ளரிப்பழப் பச்சடி


தேவையான பொருட்கள்:

வெள்ளரிப்பழம் - 1 (நடுத்தர அளவு)
பச்சை மிளகாய் - 7
புளி - சிறிய எலுமிச்சையின் பாதியளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1 அல்லது 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • வெள்ளரிப் பழத்தைத் தோல்சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • ஆறியதும், ஊறவைத்த புளி சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும்.
  • இக்கலவையை வெள்ளரித்துண்டுகளுடன் சேர்த்துப் பிசறவும்.
  • தேவையான உப்பு, மற்றும் தயிர் சேர்க்கவும்.




குறிப்பு:

  • தயிர் சேர்க்காமல் இருந்தால் காரம், புளி சுவை இன்னும் நன்றாக இருக்கும்.
  • விருப்பமானால், இறுதியில் கடுகு பெருங்காயம் தாளித்துச் சேர்க்கலாம்.

கற்றுக் கொடுத்தது: திருமதி. சகுந்தலா கிருஷ்ணமூர்த்தி, தோழி

Tuesday, June 28, 2011

பருப்புவடை மோர்க்குழம்பு


தேவையான பொருட்கள்:

மோர் - 2 கோப்பை
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 10
வற்றல் மிளகாய் - 3
பெருங்காயம் - 2 சிட்டிகை
பருப்பு வடை - 7
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, வெந்தயம் - தாளிக்க
கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லித்தழை - தூவும் அளவுக்கு

செய்முறை:


  • துவரம்பருப்பு, பச்சரிசி, கொத்துமல்லி விதை இவை அனைத்தையும் சுமார் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த பொருட்களுடன் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெந்தயம், வற்றல்மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
  • பின் அரைத்த விழுதுடன் மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
  • பின் மோரை அத்னுடன் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  • மோர் திரிந்து விடாமல் இருப்பது அவசியம். அதே நேரத்தில் கொதிக்கவும் வேண்டும்.
  • சற்றே இறுக்கமாக இந்தக்கலவை வரும் போது பருப்பு வடைகளையும் போட்டு விடவும்.
  • பின் இரண்டு, மூன்று நிமிடங்களில் கொத்துமல்லித் தழை தூவி இறக்கி விடவும்.
  • வடை நன்கு ஊற சுமார் 30 நிமிடங்களாவது பிடிக்கும்.




குறிப்பு: பருப்பு வடைகள் அதிகம் மொறுமொறுப்பாக இல்லாமல், சற்றே தடிமனாகத் தட்டிக் கொள்ளவும்.


கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா


Thursday, April 21, 2011

சேனைக்கிழங்கு மசாலா வறுவல்


தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 200 கிராம் (சுமார் 25 துண்டுகள்)
கடலைப்பருப்பு - 1/2 கோப்பை
கொத்தமல்லி விதை - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 150 மிலி.
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • சேனைக்கிழங்கைத் தோல் சீவி, செவ்வகத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கிழங்குடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி விடவும்.
  • கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய்வற்றல் சோம்பு இவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்; தூள் தூளாக இல்லாமல் ஒன்றிரண்டாகப் பொடி செய்யவும்.
  • பின் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் அதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து விழுதாக, மசாலா வடைப் பக்குவத்துக்கு அரைக்கவும்.
  • இந்த விழுதை, வேகவைத்து ஆறிய கிழங்குகளுடன் நன்கு கலந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
  • பின் வாணலியில் எண்ணெய் காய வைக்கவும்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் மசாலாவுடன் பிசறிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும்.

     
குறிப்பு:


சேனைக்கிழங்கு என்று தென் மாவட்டங்களில் அறியப்படும் இக்கிழங்கு, சில இடங்களில் கருணைக்கிழங்கு என்றும் கூறப்படுவதுண்டு.

கற்றுக் கொடுத்தது: திருமதி ப்ரியா ரமேஷ், தோழி

Monday, April 18, 2011

தக்காளி சூப் குழம்பு

பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? இந்த சூப்பும் இப்படித்தான்...குடிப்பதை விடச் சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடச் சுவையானது.


தேவையான பொருட்கள்:

தக்காளி - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பற்கள்
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - ஒரு சிட்டிகை
மல்லிப்பொடி - 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டுகள்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி




செய்முறை:
  • சற்றே நடுத்தர அளவில் நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு, வெங்காயம், துவரம்பருப்பு, மஞ்சள்பொடி இவற்றுடன் மூன்று கோப்பை தண்ணிரைச் சேர்த்து குக்கரில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
  • தேங்காய், சோம்பு 1/2 தேக்கரண்டி, பொட்டுக்கடலை, மல்லிப்பொடி  - இவற்றை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, மீதமிருக்கும் சோம்பு இவற்றைத் தாளிக்கவும்.
  • குக்கரில் உள்ள கரைசலை வாணலியில் ஊற்றவும்.
  • தேவையான உப்பு சேர்க்கவும்.
  • கொதித்து வரும்போது, அரைத்த விழுதைச் சேர்த்து, இரண்டு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


குறிப்பு:


தக்காளியில் புளிப்பு போதவில்லையென்றால், கொஞ்சம் புளித்தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

கற்றுக்கொடுத்தது: திருமதி பத்மா, அம்மா
சுவை கூட்டக் குறிப்புகள் கொடுத்தது: திருமதி. புவனா சேகர், தோழி

Wednesday, March 9, 2011

உருளைக்கிழங்கு பச்சைமிளகாய்க் குருமா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3
பச்சை மிளகாய் - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பற்கள்
கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு பிடி
துருவிய தேங்காய் - 3/4 கோப்பை
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - 4 துண்டுகள்
கிராம்பு - 3
சோம்பு - 2 தேக்கரண்டி
கச கசா - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

  • உருளைக்கிழங்கை வேகவைத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் கொத்தமல்லிவிதை, கீறிய பச்சைமிளகாய் வறுத்துக் கொள்ளவும். பின், இதனுடன் தேங்காய், சோம்பு, கச கசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய், எண்ணெய் விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளி, நீளவாக்கில் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பின் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • பின் உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடவும்.
  • பச்சை வாசம் போகும் வரை கொதித்து அடங்கியதும், தீயைச் சற்றே தணித்துவிட்டுத் தயிரைச் சேர்க்கவும்.
  • இரண்டு மூன்று நிமிடங்களுப்பின், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.



குறிப்பு:

  • இஞ்சி வேண்டுபவர்கள் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேங்காய் விழுது அரைக்கும் போது முந்திரிப்பருப்பு ஒன்றிரண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
  • அதிகமான பச்சை நின்றம் வேண்டுவோர், கொஞ்சமாகக் கொத்தமல்லித் தழையையும் தேங்காயுடன் அரைத்துக்கொள்ளலாம்.
  • தயிருக்குப் பதிலாக 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
கற்றுக்கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா

Friday, March 4, 2011

தேங்காய்ப்பால் சாதம்

தேவையான பொருட்கள்:


பச்சரிசி / பிரியாணி அரிசி - 1 1/4 கோப்பை
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
வெங்காயம் பெரியது - 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி சிறியது - 1
பட்டை - 3 துண்டுகள்
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
வெண்ணெய் / நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 தேக்கரண்டி
புதினா - 6 இலைகள் மட்டுமே
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
  • துருவிய தேங்காயிலிருந்து தேங்காய்ப்பால் எடுக்கவும்.
  • வாணலியில் வெண்ணெய் / நெய், எண்ணெய் சேர்த்துச் சூடேறியதும், பொடித்த சோம்பு, பட்டை, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு நேர்த்து வதக்கவும்.
  • தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  • தேங்காய்ப்பாலுடன் தேவையான தண்ணீர், அரிசி, உப்பு சேர்க்கவும்.
  • அவ்வப்போது கிளறி விடவும்.

குறிப்பு:


இந்தச் சாதத்தில், ருசியைவிட மணம் மட்டுமே மிகவும் தூக்கலாகத் தெரியும். எனவே, இது மேலும் ருசிக்க, சரியான குழம்பு வகை வேண்டும். காரமான குருமா, முட்டைக்குழம்பு, அல்லது காரமான ஏதாவது சைவ / அசைவ மசாலாக் குழம்பு வகை பொருத்தமானதாக இருக்கும்.

கற்றுக் கொடுத்தது:  திருமதி. ஜோதி,  அத்தை

Wednesday, February 2, 2011

நண்டு மிளகு மசாலா

தேவையான பொருட்கள்:


நண்டு - 8
வெங்காயம் - 2
தக்காளி சிறியது - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது - 1/4 கோப்பை
கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க
என்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:


  • நண்டுகளைச் சுத்தம் செய்து கொள்ளவும்.சுத்தம் செய்யும் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
  • வாணலியில் எண்ணெய் வைக்கவும். எண்ணெய் சூடான பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • எண்ணெய் விடாமல் வறுத்த கொத்தமல்லி விதை, தேங்காய், மிளகு, சீரகம், மிளகாய்ப்பொடி ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக மசாலாவை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இந்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
  • மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
  • பின் நண்டுகளையும் வாணலியில் சேர்த்து மெதுவாகப் பிரட்டி விடவும்.
  • அரை கோப்பை தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
  • நண்டுகள் வெந்ததும், மெதுவாகப் பிரட்டி விடவும். மசாலா அடர்த்தியாகும் வரை அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும்.
  • கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
    (கொஞ்சம் அதிகமாகவே தூவிவிட்டேன்.)
    கற்றுக் கொடுத்தது : திருமதி ஜோதி, என் அத்தை
    

நண்டு சுத்தம் செய்யும் முறை

நண்டு சுத்தம் செய்வது எப்படியென்பது புரியாமலே இருந்தது. என்னைப்போல் பலரும் இது புரியாமல் இருப்பார்கள். சுத்தம் செய்யத் தெரியாமல் சமைக்க முடியாமலும் போகும்.
இதோ இப்படி இருக்கும் நண்டை எப்படி மாற்றலாம் பாருங்கள்...

ஆங்கில V போலத் தோற்றமளிக்கும் பகுதி இது...


அந்த V பகுதியைப் பிய்த்து எடுக்க வேண்டும்


V திறந்ததும் இப்படி இருக்கும்.


மஞ்சள் வண்ணப் பகுதியையும், நீளமாகச் சின்னச் சின்னதாக இருக்கும் தூள்களையும் எடுத்து விட வேண்டும்.


 எடுத்துக் கீழே எறிய வேண்டிய பகுதிகள்


 தேவையற்ற பாகங்களை எடுத்ததும் இப்படி இருக்கும்.




நன்றாகக் கழுவ வேண்டும்.




 பெரிய நண்டாக இருந்தால் இரண்டாக வெட்டிக் கொள்ளலாம். சிறியதாக இருந்தால் முழுதாகவே எடுத்துக்கொள்ளலாம்.



அதன் பெரிய கொடுக்குகளைத் தனியாகப் பிய்த்து எடுத்துக் கொள்ளவேண்டும்.


முழு நண்டு வடிவம்தான்...ஆனால் அங்கங்கே வெட்டப்பட்டதுதான்....பிரித்து மேய்ந்த பாகங்கள் இப்படி அடுக்கப்பட்டுள்ளன...


நண்டு மிளகு மசாலா தயார்...செய்முறை அடுத்த பதிவில்..


கற்றுக் கொடுத்தது : திருமதி ஜோதி, என் அத்தை