Thursday, April 21, 2011

சேனைக்கிழங்கு மசாலா வறுவல்


தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 200 கிராம் (சுமார் 25 துண்டுகள்)
கடலைப்பருப்பு - 1/2 கோப்பை
கொத்தமல்லி விதை - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 150 மிலி.
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • சேனைக்கிழங்கைத் தோல் சீவி, செவ்வகத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கிழங்குடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி விடவும்.
  • கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய்வற்றல் சோம்பு இவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்; தூள் தூளாக இல்லாமல் ஒன்றிரண்டாகப் பொடி செய்யவும்.
  • பின் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் அதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து விழுதாக, மசாலா வடைப் பக்குவத்துக்கு அரைக்கவும்.
  • இந்த விழுதை, வேகவைத்து ஆறிய கிழங்குகளுடன் நன்கு கலந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
  • பின் வாணலியில் எண்ணெய் காய வைக்கவும்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் மசாலாவுடன் பிசறிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும்.

     
குறிப்பு:


சேனைக்கிழங்கு என்று தென் மாவட்டங்களில் அறியப்படும் இக்கிழங்கு, சில இடங்களில் கருணைக்கிழங்கு என்றும் கூறப்படுவதுண்டு.

கற்றுக் கொடுத்தது: திருமதி ப்ரியா ரமேஷ், தோழி

Monday, April 18, 2011

தக்காளி சூப் குழம்பு

பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? இந்த சூப்பும் இப்படித்தான்...குடிப்பதை விடச் சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடச் சுவையானது.


தேவையான பொருட்கள்:

தக்காளி - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பற்கள்
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - ஒரு சிட்டிகை
மல்லிப்பொடி - 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டுகள்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி




செய்முறை:
  • சற்றே நடுத்தர அளவில் நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு, வெங்காயம், துவரம்பருப்பு, மஞ்சள்பொடி இவற்றுடன் மூன்று கோப்பை தண்ணிரைச் சேர்த்து குக்கரில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
  • தேங்காய், சோம்பு 1/2 தேக்கரண்டி, பொட்டுக்கடலை, மல்லிப்பொடி  - இவற்றை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, மீதமிருக்கும் சோம்பு இவற்றைத் தாளிக்கவும்.
  • குக்கரில் உள்ள கரைசலை வாணலியில் ஊற்றவும்.
  • தேவையான உப்பு சேர்க்கவும்.
  • கொதித்து வரும்போது, அரைத்த விழுதைச் சேர்த்து, இரண்டு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


குறிப்பு:


தக்காளியில் புளிப்பு போதவில்லையென்றால், கொஞ்சம் புளித்தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

கற்றுக்கொடுத்தது: திருமதி பத்மா, அம்மா
சுவை கூட்டக் குறிப்புகள் கொடுத்தது: திருமதி. புவனா சேகர், தோழி