Wednesday, January 11, 2012

வெந்தயக்களி

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 கோப்பை
உளுத்தம்பருப்பு - 1/4 கோப்பை
வெந்தயம் - 1/4 கோப்பை
கருப்பட்டி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மூன்றையும் சுமார் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பின் அரவை இயந்திரத்தில் நன்றாக மையாக அரைக்கவும்.

  • Non-stick பாத்திரம் அல்லது கனமான பாத்திரத்தில் மாவுடன் 3 கோப்பை உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து  மிதமான தீயில் கிளறவும்.
  • கட்டிகள் உருவாகா வண்ணம் தொடர்ந்து கிளறுவது அவசியம்.

  • சுமார் 15 நிமிடத்தில் களி தயாராகிவிடும்.

    சாப்பிடும் முறை:
  • சூடான களியைத் தட்டில் வைத்து, நடுவே குழியாக்கவும்.
  • பொடியாகத் தூள் செய்த கருப்பட்டி / பனைவெல்லம் நடுவில் வைத்து நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிடவும்.

  • அவரவர் தேவை / விருப்பத்துக்கேற்ப மேலும் மேலும் கருப்பட்டியும், எண்ணெய்யும் சேர்த்துக் கொள்ளவும்.
  • காரப்பிரியர்கள் இரண்டாவது சுற்று சாப்பிடும் போது தேங்காய்ச் சட்னியுடன் சுவைக்கலாம்.

  • சைவப்பிரியர்கள் மொச்சைக்கொட்டை புளிக்குழம்பும், அசைவப்பிரியர்கள் கருவாட்டு மொச்சைக்குழம்பும் சேர்த்துச் சாப்பிடலாம்.
குறிப்பு:
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு அவ்வப்போது உடற்சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, இடுப்பு வலி மற்றும் இலகுவான சுகப்பிரசவம் இவற்றுக்கு மிகவும் உகந்தது இந்தக்களி.
  •  வாரம் ஒரு முறை வீட்டில் அனைவரும் சாப்பிட்டு வர,  உடற்சூடு தணியும்.
  • சர்க்கரை நோயாளிகள் அரிசியின் அளவைச் சற்றே குறைத்து, வெந்தயத்தின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா

மங்கையர் உலகம் ஜனவரி மாதப் போட்டி

http://ithu-mangayarulagam.blogspot.com/2012/01/blog-post.html

Tuesday, January 10, 2012

கோவைக்காய்த் துவையல்

தேவையான பொருட்கள்:

கோவைக்காய் - 150 கிராம்
வெங்காயம் சிறியது - 1
தக்காளி - சிறியது 2
புளி - சிறிய எலுமிச்சையளவு
மிளகாய்வற்றல் - 8
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி விதை - 3 மேசைக்கரண்டி
கடுகு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
  • கோவைக்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கழுவித் தண்னீர் வடிகட்டவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளிக்கவும்.
  • கோவைக்காயைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்
  • கொத்துமல்லி விதை, கிள்ளிய வற்றல்மிளகாய், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  • நன்கு வதங்கி, ஆறியதும், உப்பு, ஊறவைத்த புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு:
  • சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளவும் சுவையாக இருக்கும்.
  • தேவைப்பட்டால், சிறிது தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கொள்ளலாம்.
கற்றுக் கொடுத்தது: திருமதி சகுந்தலா கிருஷ்ணமூர்த்தி, தோழி