Sunday, February 26, 2012

பாசிப்பயிறு காரப் பணியாரம்

தேவையான பொருட்கள்:

பாசிப்பயிறு - 3/4 கோப்பை
புளித்த இட்லி / தோசை மாவு - 1 கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய தேங்காய் - தேவையான அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • பாசிப்பயிறைக் கழுவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பாசிப்பயிறுடன் உப்பு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் புளித்த இட்லி மாவுடன் உப்பு சேர்த்து அரைத்த பாசிப்பயிறு மாவையும் கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
  • பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • தாளித்தவற்றை மாவுடன் நேர்த்து, தேங்காய்த் துன்டுகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அடுப்பில் பணியாரச்சட்டியை வைத்து, பணியாரம் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு:

  • மாவு புளிக்கவில்லையென்றால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கலக்கலாம்.
  • காரப்பிரியர்கள் பச்சைமிளகாயை பாசிப்பயிறுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.

கற்றுக் கொண்டது:

பெசரட்டு செய்த போது இதைச் செய்தால் என்ன என்று தோன்றியபோது செய்தது.

Wednesday, February 22, 2012

எண்ணெய்க் கத்தரிக்காய் மசாலா

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 8
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பற்கள்
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
வறுத்த நிலக்கடலை (தோல் நீக்கியது) - 1/3 கோப்பை
எள்ளு (வெள்ளை / கறுப்பு) - 3 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 4 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
நீர்த்த புளிக்கரைசல் - 1/4 கோப்பை
எண்ணெய் - 1/3 கோப்பை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கத்தரிக்காய்களை காம்பு நீக்கி நீள்வாக்கில் கீறிக்கொள்ளவும்.(பெரிய கத்தரிக்காயாக இருந்தால் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.)
  • எள்ளு, கொத்தமல்லி விதை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் கடலை, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • வதக்கிய வெங்காயம், தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கத்தரிக்காய்களைப் போடவும்.
  • கத்தரிக்காய் நிறம் மாறியதும், பொடியாக நறுக்கிய பூண்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும்.

  • மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

  • கத்தரிக்காய் அதிகம் குழையாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • மசாலா இறுகி வந்ததும் இறக்கி விடவும்.
குறிப்பு:

  • க்ரேவி போல வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் முன்னாலேயே எடுத்து விடலாம்.
  • நம் வீட்டிற்காகச் செய்யும் போது எண்ணெய் சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.
  • பிரியாணி, நெய் சாதம், தக்காளி சாதம், சப்பாத்தி இவற்றுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

கற்றுக் கொடுத்தது: திருமதி. நளினி சதானந்த், தோழி

Tuesday, February 21, 2012

தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2
பூண்டு - 3 பற்கள்
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
நீர்த்த புளிக்கரைசல் - 1/2 கோப்பை
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வேகவைத்த துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி

பொடிக்க:

மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - 2 சிட்டிகை
செய்முறை:

  • தக்காளியைச் சுடுதண்ணீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், வெந்தயம் வறுத்துக் கொள்ளவும்.
  • பின் அவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.
  • அதனுடன் தக்காளி, மற்றும் பூண்டு சேர்த்து 2 சுற்று சுற்றவும்.
  • பின் இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி, வேகவைத்த துவரம்பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
  • பின் தக்காளிக் கரைசலை வாணலியில் ஊற்றிக் கொதிக்க விடவும்.

  • நன்கு நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, பாத்திரத்தில் எடுத்து ஊற்றவும்.
  • அதிகம் கொதிக்க விடக்கூடாது; நன்கு நுரைத்ததும் இறக்கி விடவும்.

குறிப்பு:
  • புளியே சேர்க்காமல் இன்னும் 2 தக்காளி அதிகமாய்ச் சேர்த்தும் செய்யலாம்.
கற்றுக் கொண்டது:  அங்கே இங்கே கேட்டது

Sunday, February 19, 2012

கார கோதுமை ரொட்டி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கோப்பை
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கோப்பை
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
  • ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு, உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
  • பின் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து  பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
  • மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.

  • ரொட்டிக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • உருண்டைகளைச் சுற்றிச் சிறிது எண்ணெய் தடவவும்.
  • ஒவ்வொரு உருண்டையாக எடுத்து நெகிழிப் பைக்குள் (plastic cover) வைத்து ரொட்டி தட்டவும்.


  • அடுப்பில் தோசைக்கல், அல்லது சப்பாத்தி செய்யும் பாத்திரத்தை வைத்து, ரொட்டி சுட்டு எடுக்கவும்.
  • எண்ணெய் தேவையான அளவு ஊற்றி, இரண்டு பக்கமும் புரட்டி எடுக்க, ரொட்டி நன்கு சிவந்து வரும்.


குறிப்பு:

  • ரொட்டியை மேலும் காரம், மணம் மிக்கதாக மாற்ற உங்களுக்குத் தேவையான பொருட்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • வாழையிலையில் வைத்து ரொட்டி தட்டினால் நன்றாக இருக்கும்.. அது கிடைக்காத போது நெகிழிப்பை பயன்படும்.
  • சற்றே மொறு மொறுப்பாக வேண்டுமானால், மாவு பிசையும் போது சிறிது ரவை சேர்த்துக் கொள்ளலாம். 
கற்றுக் கொடுத்தது: சிநேகிதி புத்தகத்தின் சமையல் இணைப்பு + எனக்குத் தோன்றிய உபரி கருத்துகள்

Sunday, February 12, 2012

வறுத்த மிளகுக் கத்தரிக்காய்

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - நடுத்தர அளவு - 6
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 4 பற்கள்
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • மிளகு, கொத்தமல்லி விதை, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் -  இவை அனைத்தையும் பொடிக்கவும்.

  • பின் நிறு துண்டுகளாக நறுக்கியவெங்காயம், துருவிய தேங்காய் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  • ஒவ்வொரு கத்தரிக்கயையும் ஆறு துன்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கத்தரிக்காய், மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

  • சற்றே வதங்கியதும் அரைத்த விழுதுடன் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றிக் கிளறவும்.
  • வாணலியை மூடி வைக்க வேண்டாம்.
  • அவ்வப்போது கிளறி விடவும்.
  • கலவை சற்றே இறுகியதும், கவனமாகக் கிளறவும்.
  • கத்தரிக்காய் குழைந்துவிடக்கூடாது.


  • நன்கு ஈரப்பதம் முழுவதும் வற்றியதும், வாணலியை இறக்கவும்.

கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா

Friday, February 10, 2012

பருப்புருண்டைக் குழம்பு + பக்கோடா


தேவையான பொருட்கள்:

(இருவருக்குத் தேவையான அளவு)

உருண்டைகள் செய்ய

துவரம்பருப்பு - 3/4 கோப்பை
பெரிய வெங்காயம் - 1/ சின்ன வெங்காயம் - 8
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 3 பற்கள்
பச்சைமிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 4 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

குழம்புக்கு அரைக்க

தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி

குழம்புக்குச் வதக்க, சேர்க்க

தக்காளி பெரியது - 1
பெரிய வெங்காயம் - 1/ சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 3 பற்கள்
கரம் மசாலப் பொடி - 1 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 1/4 கோப்பை
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

பட்டை - 3 துண்டு
கிராம்பு - 2
கடுகு, உளுந்து - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

உருண்டைகள் செய்யும் முறை
  • துவரம்பருப்பைச் சுமார் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • ஒரு வெங்காயம், 3 பூண்டுப் பற்கள், 2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுப்   பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,  பூண்டு மூன்றையும் பொன்னிறமாக வதக்கவும்.
  • தண்ணீர் வடிகட்டிய பருப்புடன்,  கரம் மசாலாப்பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி, தேங்காய்த்துருவல் 4 தேக்கரண்டி,காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  • சிறிய லட்டு அளவில் 6 உருண்டைகள் இறுக்கமாகப் பிடிக்கவும்.
குழம்பு செய்யும் முறை
  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்து, பட்டை, கிராம்பு, சோம்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் ஒன்று, 3 பூண்டுப் பற்கள்,  தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் புளிக்கரைசல், மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • பச்சை வாசனை போனது ம்  தேங்காய், சோம்புக் கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • நன்கு நுரைத்து படத்தில் உள்ள பக்குவத்துக்கு வரும்போது அடுப்பின் தீயை மட்டுப்படுத்தி, பிடித்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாக இட்டு, வாணலியை மூடிவைக்கவும்.



  • சற்று நேரம் கழித்து உருண்டகளை மெதுவாகப் புரட்டி விடவும்.
  • உருண்டைகள் வேகச் சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் பிடிக்கும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் உருண்டை பிடித்துபோக மீதமுள்ள கலவையைக் கிள்ளிப் பொரித்தால் பக்கோடா தயார்.
குறிப்பு: 
  • முழுவதும் துவரம்பருப்பு சேர்க்காமல், பாதி துவரம்பருப்பு, பாதி கடலைப்பருப்பு சேர்க்கலாம்.
  • கவனமாகச் செய்தால் உருண்டை உடையும் வாய்ப்புகள் இல்லை; இருந்தாலும், உடைந்து விடுமோ என்று தோன்றினால் இட்லிப்பானை  ஆவியில் உருண்டைகளை வேகவைத்துச் சேர்க்கலாம்.
கற்றுக்கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா



Sunday, February 5, 2012

கொள்ளுக்கஞ்சி


தேவையான பொருட்கள்: 

(2 கோப்பைக்கான அளவு)

கொள்ளு - 3 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு / பயத்தம்பருப்பு - 3/4 மேசைக்கரண்டி
பூண்டு - 3 பற்கள்
தேங்காய்த்துறுவல் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:


கொள்ளு



வறுத்த கொள்ளூ + பாசிப்பருப்பு




  • கொள்ளு, மற்றும் பயத்தம் பருப்பைத் தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் அரைகுறையாகப் பொடி செய்யவும்.




  • பிரஷர் குக்கரில் பொடித்த கொள்ளு + பாசிப்பருப்புடன் 3 கோப்பை தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் வைக்கவும்.
  • கஞ்சி தயாரனதும், தேங்காய்த்துறுவலைச் சேர்த்துக் கொள்ளவும்.



குறிப்பு:


  • மேலும் சுவைகூட்டப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கொள்ளு, பாசிப்பருப்பு 3:1 என்ற விகிதத்தில் வறுத்துப் பொடித்து டப்பாவில் வைத்துத்  தேவையான போது கஞ்சி  வைத்துக்கொள்ளலாம்.

அங்கே இங்கே கேட்ட குறிப்புகளை வைத்து நான் முயற்சித்தது