Tuesday, October 16, 2012

சிவப்பு அரிசி இனிப்புப் புட்டு

தேவையான பொருட்கள்:

சிவப்புப் புட்டு அரிசி மாவு - 1/2 கோப்பை
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - சீனி - 6 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • புட்டு மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு உப்புக் கலந்த நீரைத் தெளித்துக் கட்டி தட்டாமல் பிசறிக் கொள்ளவும்.

  • பின் புட்டுப் பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் மாவு, பின் தேங்காய் என்று மாறி மாறிப் பரப்பவும்.






  • புட்டுப் பாத்திரத்தை மூடி, குக்கரில் வெய்ட் வைக்கும் இடத்தில் பொறுத்தவும்.
  • 5 நிமிடங்கள் நல்ல ஆவியில் வெந்ததும், இறக்கவும்.
  • அகலமான பாதிரத்தில், புட்டை இட்டு, அதனுடன், சர்க்கரை, நெய், சேர்த்துக் கிளறவும்.

  • மீண்டும் புட்டுப் பாத்திரத்தில் சற்றே இறுக்கமாக அழுத்தி வைத்து, ஒரு தட்டில் கவிழ்க்கவும்.

குறிப்பு:
  • வெள்ளை அரிசிப் புட்டுக்கும் இதே குறிப்புதான்.
  • தேவைப்படுமானால், ஏலக்காய்ப் பொடி, பொடித்த முந்திரி சேர்த்துக் கொள்ளலாம்.
  • குழாய்ப் புட்டு போலவே, தேங்காய்ச் சிரட்டையில் புட்டு செய்வதும் கேரள உணவின் சிறப்பம்சம். தேங்காய்ச் சிரட்டைக்குப் பதிலாக இப்பாத்திரம்.
  • வாழைப்பழத் துண்டுகள் சேர்த்துச் சாப்பிட்டால் அலாதி ருசி தரும்.
  • நெய் சேர்க்காமல், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிடாய் தொந்தரவுகள், இடுப்பு வலி உள்ளவர்கள், வயதுக்கு வந்த பெண்கள் முதலியோர்க்கு சக்தி தரும் உணவாகும் இது.
 

வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 1/2 கோப்பை
பாசிப்பருப்பு - 1/2 கோப்பை
மிளகு - 4 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 3 தேக்கரண்டி
நெய் - 1/2 கோப்பை
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • அரிசியைக் கழுவியபின், 6 கோப்பை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
  • பாசிப்பருப்பை வறுத்து, பெருங்காயம் சேர்த்து, சுமார் 10 நிமிடம் வேகவைக்கவும்.
  • அரிசி உருமாறிச் சாதம் ஆகத் தொடங்கும்போது பாசிப்பருப்பு, உப்பு சேர்க்கவும்.
  • துருவிய இஞ்சியில் 1 தேக்கரண்டி அரிசி, பருப்புடன் சேர்க்கவும்.
  • தீயைச் சிறிதாக வைத்து, மூடிவைத்து, அவ்வப்போது கிளறவும்.
  • தண்ணீர் அளவு குறைந்து, பொங்கல் முக்கால் பதத்தில் இருக்கும் போது, வாணலியில் 3 தேக்கரண்டி நெய் விட்டு, சூடானதும், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம், மீதமிருக்கும் இஞ்சித்துறுவல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரிசி பருப்புடன் சேர்த்துக் கிளறவும்.
  • நன்கு குழைந்து வெந்ததும், மீதமிருக்கும் நெய்யை ஊற்றிக் கிளறி, 2 அல்லது 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்துப் பின் இறக்கவும்.
  • நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.

குறிப்பு:
  • குக்கரில் வைக்கும்போது எல்லாவற்றையும் ஒரே நேரத்திலேயே வைத்து விடலாம்...தாளிப்பைத் தவிர...
  • குக்கரில் செய்வதை விட இந்த ருசி சிறப்பாக இருக்கும். அளவும் அதிகமாக வரும்.
  • காரம் சற்று அதிகமாக வேண்டுமென்றால், பச்சை மிளகாய் (அரிசி வேகும்போது) சேர்த்துக்கொள்ளலாம்.
  • அக்மார்க் ருசிக்கு இவ்வளவு நெய் தேவை..மற்றபடி ஆரோக்கியம் கருத்தில் கொண்டு குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்..