Monday, April 26, 2010

தேங்காய் மாங்காய்த் துவையல்

தேவையான பொருட்கள்:

மாங்காய் - (நடுத்தர அளவு) - 1
தேங்காய்த்துருவல் - 4 மேசைக்கரண்டி
நிலக்கடலை - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 1
சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • மாங்காயைத் தோல் சீவிச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலையை வறுத்துத் தோல் நீக்கிக் கொள்ளவும்.
  • பின் மாங்காய்த்துண்டுகள், தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், கடலை, சீரகப்பொடி, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

கற்றுக் கொடுத்தது: சமையல் சமையல், விஜய் தொலைக்காட்சி

Sunday, April 25, 2010

உருளைக்கிழங்கு பலாக்கொட்டை மசாலா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3
பலாக்கொட்டை - 25
பெரிய வெங்காயம் - 2 (சிறியது) / 1 (பெரியது)
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 2 சிறிய பல் / 1 பெரிய பல்
கொத்துமல்லித்தழை - (பொடிதாக நறுக்கியது) 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • உருளைக்கிழங்கையும், பலாக்கொட்டையும் வேகவைத்துத் தோலுரித்துச் சிறு துண்டுகளாக்கவும். (பலாக்கொட்டைக்கு அரைவேக்காடு போதுமானது.)
  • வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடியும், உப்பும் சேர்த்து வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் ஊற்றவும்.
  • பின் உருளைக்கிழங்கும், பலாக்கொட்டையும் சேர்த்துக் கிளறி விடவும். அவ்வப்போது போதிய இடைவெளியில் கிளறி விடவும்.
  • முக்கால் பதம் வந்துள்ளபோது தேங்காய், சோம்பு விழுதாக அரைத்துச் சேர்க்கவும்.
  • பூண்டை நன்றாகத் தட்டிச் சேர்த்துக் கிளறவும்.
  • ஈரப்பதம் போகும் வரை வதக்கவும். கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

Monday, April 19, 2010

பொரித்து வறுத்த கோழி

தேவையான பொருட்கள்:

கோழி (நடுத்தர அளவுத் துண்டுகள்) - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்துமல்லித்தழை - அலங்கரிக்க
எண்ணெய் - 100 மி.லி.
பட்டை - 2 சிறிய துண்டுகள்
கிராம்பு - 3
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
கொத்தமல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி இஞ்சிபூண்டு விழுது, 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, 1 தேக்கரண்டி மல்லிப்பொடி இவையனைத்தையும் கோழித்துண்டங்களின் மீது பிசிறி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழித்துண்டங்கள் மூன்று மூன்றாக இட்டு மிதமான தீயில், அரைவேக்காட்டில் பொரித்தெடுக்கவும். அதிகமான நேரம் எண்ணெயில் இருக்கவிட வேண்டாம்.
பின் அதே எண்ணெயில் (எண்ணெய் அதிகம் என்றால் கொஞ்சம் எண்ணெயை எடுத்து விடலாம்) பட்டை, கிராம்பு தாளித்த பின், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வரும்போது, மீதமிருக்கும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். சற்றே வதங்கியவுடன், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்க்கவும். பின் கோழித்துண்டங்களையும் அதில் போடவும். கோழியை வேகவைக்கத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தக்காளியையும் சேர்க்கவும். வாணலியை மூடி வைக்கவும். நடுநடுவில் கிளறி விடவும். இறக்குவதற்கு 5 நிமிடம் முன்னதாக கரம் மசாலா தூவி இறக்கவும்.
குறிப்புகள்:

தக்காளி வதக்காமல் காயோ, இறைச்சியோ வேகவைக்கும் நேரத்தில் சேர்த்தால், நிறமும் சுவையும் சற்றுக் கூடுதலாக இருக்கும்.

கோழித்தொக்காக இருக்காமல், அடர்த்தியான மசாலாவுடன் வேண்டுவோர் சற்று முன்னதாக இறக்கிவிடலாம்.

கற்றுக் கொடுத்தது: தோழி ஃபெனில்டா

தக்காளிப் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3 சிறியது / 2 பெரியது (மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும்)
புளிக் கரைசல் - ஒரு சிறிய எலுமிச்சையளவு புளியின் கரைசல்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு, பெரிய பற்கள் - 10 (இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்)
மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
கொத்தமல்லிப் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவ



தாளிக்க:

எண்ணெய் (2 அல்லது 3 மேசைக்கரண்டி) கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம், சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை

(தாளிக்கும் வடகமும் பயன்படுத்தலாம்)

செய்முறை:

தக்காளியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அடித்துச் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் புளிக்கரைசல், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு- இவை அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானவுடன், கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம் தாளிக்க வேண்டும். பின்
வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துப் பொன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் அனைத்து பொருட்களும் கலந்த கரைசலை வாணலியில் இட வேண்டும். பச்சை வாசனை போகின்ற வரையில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும



கற்றுக் கொடுத்தது : தோழி ஷோபா.