Monday, December 13, 2010

சங்கரா மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சங்கரா மீன் துண்டுகள் - 4
தக்காளி சிறியது - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு - 6 பற்கள்
வெங்காயம் - 1
மிளகாய்ப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • மீன் துண்டுகளை மஞ்சள் உப்பு போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.
  • தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும்.
  • புளியைக் கெட்டிக் கரைசலாகக் கரைத்து, அதனுடன் அரைத்த தக்காளி விழுதைச் நேர்க்கவும்.
  • இதனுடன் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
  • மிளகையும், கறிவேப்பிலையையும் கல்லில் தட்டிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
  • இடித்த மிளகு கறிவேப்பிலையுடன் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வாசம் வந்ததும் தக்காளி, புளிக் கரைசலை போட்டுக் கொதிக்க விடவும்.
  • நன்கு கொதி வந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு வாணலியை மூடி வைக்கவும்.
  • அடுப்பின் நெருப்பு மிதமாக வைக்கவும்.
  • சுமார் 7 நிமிடங்களில் மீன் துண்டுகள் வெந்து விடும்.


குறிப்பு:

  • மீன் சுத்தம் செய்ய, சாம்பல் இல்லையெனில் கோதுமை மாவு, கல் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசறி வைத்துக் கழுவலாம்.
  • மீன் துண்டுகளைக் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தும் போது மஞ்சள்பொடி, உப்பு, சிறிது மிளகாய்ப்பொடி கலந்து வைக்கவும்.
  • மீன் கழுவும் போதும், மசாலா சேர்க்கும் போதும் மீன் குளிர்ச்சியாக இருக்கக் கூடாது.
  • விருப்பப்பட்டால், தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.
  • தாளிப்பதற்கு வடகம் வைத்திருப்பவர்கள் அதைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கற்றுக் கொடுத்தது : திருமதி ஜோதி, என் அத்தை

Monday, October 18, 2010

புடலங்காய்ப்புட்டு

தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 5
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 3 சிறிய துண்டு
கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 50 கிராம்
எண்ணெய் - 100 மிலி.
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • புடலங்காயைப் பொடிதாக நறுக்கவும். பொடியாகச் சீவியும் கொள்ளலாம்.
  • உப்பு, மஞ்சள்தூள் போட்டுப் பிசறி வைகவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • புடலங்காய் சிறிது தண்ணீர் விட்டிருக்கும். நன்றாகப் பிழிந்து விட்டு வாணலியில் சேர்த்து வதக்கவும்.
  • இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • வாணலியை மூடி வைக்கவும்.
  • தண்ணீர் தெளிக்க வேண்டாம். எண்ணெயிலேயே வேக வேண்டும்.
  • வெந்ததும் பொட்டுக்கடலையைப் பொடி செய்து தூவவும்.



கற்றுக் கொடுத்தது : திருமதி ஜோதி, என் அத்தை

Friday, June 18, 2010

பாகற்காய் வறுவல் - 1

தேவையான பொருட்கள்:

பெரிய பாகற்காய் - 3
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பற்கள்
எண்ணெய் - 6 தேக்கரண்டி
மிளகாய்ப்போடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு





















செய்முறை:
  • பாகற்காயைச் சற்றே பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (1 பாகற்காயை 3 அல்லது நான்கு துண்டுகளாக்க வேண்டும்.)
  • மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்துப் பிசறி, ஆவியில் அரை வேக்காடு வேக வைக்க வேண்டும். (இட்லிச் சட்டியில், அல்லது வாணலியின் தண்ணீர் வைத்து அதனுள் ஓர் உயரமான கிண்ணத்தில்.வைத்து ஆவியில் வேக வைக்கலாம்.)
  • பின் வாணலியில் எண்ணெய் விட்டு, எண்னெய் சூடேறியவுடன் பாகற்காய் துண்டுகள், மிளகாய்ப்பொடி சேர்த்து வதக்கவும்.
  • பாகற்காய் சற்றே வதங்கியவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாகச் சிவக்கும் வரை வறுக்கவும்.
















குறிப்பு:


சின்ன வெங்காயம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
மிளகாய்ப்பொடியும் அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.

கற்றுக் கொடுத்தது: சுனிதா, என் தோழி

Saturday, May 29, 2010

ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி - 250 கிராம்
இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 மேசைக்க்ரண்டி
எண்ணெய் - 3/4 கோப்பை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கறியைச் சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
  • அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவி எடுக்கவும்.
  • கறியுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பிசறிக் குக்கரில் முக்கால் வேக்காடு வேகவைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்தவுடன், கறித்துண்டுகளைச் சேர்த்து நன்கு வறுத்தெடுக்கவும்.
  • துண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்வரை வறுக்க வேண்டும்.
குறிப்பு:

  • இளங்கறியாக இருந்தால் அரை வேக்காடு போதும்.
  • காரம் அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் சற்றுத் தாரளமாக இருப்பதுதான் சுக்காவுக்கே சுவை.
  • கரம் மசாலா தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.
கற்றுக் கொடுத்தது - பத்மா, என் அம்மா

Saturday, May 15, 2010

கேரட் நிலக்கடலை வறுவல்

தேவையான பொருட்கள்:

கேரட் - 4
நிலக்கடலை - 1/2 கோப்பை (200 மி.லி.)
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
  • கேரட்டைச் சின்னச் சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலையை அரை வேக்காடு வேகவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கேரட்டைப் போட்டு வதக்கவும்.
  • கேரட்டின் நிறம் சற்றே மாறும் போது மிளகாய்பொடி, உப்பு சேர்க்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். (மூட வேண்டாம்.)
  • பின் கடலை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.


கற்றுக் கொடுத்தது: லக்ஷ்மி, தோழி

Thursday, May 6, 2010

துவரம்பருப்பு தோசை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 1/2 கோப்பை (200 மி.லி. கோப்பை)
பச்சரிசி - 1 கோப்பை
துவரம்பருப்பு - 3/4 கோப்பை
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
வற்றல் மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய், பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:

  • அரிசி, பருப்பை சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய் சேர்த்து இட்லி மாவு பக்குவத்திற்கு அரைக்கவும்.
  • கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து மாவில் சேர்க்கவும்.
  • கெட்டியாக இல்லாமல், மாவைத் தண்ணீராய்க் கரைத்துக் கொள்ளவும். (கோதுமை தோசை பதத்துக்கு)
  • தோசைக்கல் நன்றாகச் சூடேறிய பின், கோதுமை தோசை வார்ப்பது போல், கல்லின் விளிம்பிலிருந்து தோசை ஊற்றவும்.
  • மேற்பரப்பு நன்றாய்ச் சிவந்தவுடன், அடுத்த பக்கம் திருப்பிப் போடவும்.


குறிப்பு:

நல்ல முறுமுறு தோசை வேண்டுபவர்கள் மாவைத் தண்ணீராய்க் கரைத்துக் கொள்ளவும்.

அடை போன்ற கெட்டியான பக்குவத்தில் வேண்டுபவர்கள், மாவைச் சற்றுக் கெட்டியாகக் கரைக்கவும்.

வேண்டுமானால், 2 மேசைக்கரண்டி தேங்காய்த் துறுவல் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவை அரைத்தவுடன் சுட்டு விடலாம். புளிக்கவைக்கத் தேவையில்லை.
 
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா,  என் அம்மா

Monday, April 26, 2010

தேங்காய் மாங்காய்த் துவையல்

தேவையான பொருட்கள்:

மாங்காய் - (நடுத்தர அளவு) - 1
தேங்காய்த்துருவல் - 4 மேசைக்கரண்டி
நிலக்கடலை - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 1
சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

  • மாங்காயைத் தோல் சீவிச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலையை வறுத்துத் தோல் நீக்கிக் கொள்ளவும்.
  • பின் மாங்காய்த்துண்டுகள், தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், கடலை, சீரகப்பொடி, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

கற்றுக் கொடுத்தது: சமையல் சமையல், விஜய் தொலைக்காட்சி

Sunday, April 25, 2010

உருளைக்கிழங்கு பலாக்கொட்டை மசாலா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3
பலாக்கொட்டை - 25
பெரிய வெங்காயம் - 2 (சிறியது) / 1 (பெரியது)
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 2 சிறிய பல் / 1 பெரிய பல்
கொத்துமல்லித்தழை - (பொடிதாக நறுக்கியது) 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • உருளைக்கிழங்கையும், பலாக்கொட்டையும் வேகவைத்துத் தோலுரித்துச் சிறு துண்டுகளாக்கவும். (பலாக்கொட்டைக்கு அரைவேக்காடு போதுமானது.)
  • வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடியும், உப்பும் சேர்த்து வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் ஊற்றவும்.
  • பின் உருளைக்கிழங்கும், பலாக்கொட்டையும் சேர்த்துக் கிளறி விடவும். அவ்வப்போது போதிய இடைவெளியில் கிளறி விடவும்.
  • முக்கால் பதம் வந்துள்ளபோது தேங்காய், சோம்பு விழுதாக அரைத்துச் சேர்க்கவும்.
  • பூண்டை நன்றாகத் தட்டிச் சேர்த்துக் கிளறவும்.
  • ஈரப்பதம் போகும் வரை வதக்கவும். கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

Monday, April 19, 2010

பொரித்து வறுத்த கோழி

தேவையான பொருட்கள்:

கோழி (நடுத்தர அளவுத் துண்டுகள்) - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்துமல்லித்தழை - அலங்கரிக்க
எண்ணெய் - 100 மி.லி.
பட்டை - 2 சிறிய துண்டுகள்
கிராம்பு - 3
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
கொத்தமல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி இஞ்சிபூண்டு விழுது, 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, 1 தேக்கரண்டி மல்லிப்பொடி இவையனைத்தையும் கோழித்துண்டங்களின் மீது பிசிறி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழித்துண்டங்கள் மூன்று மூன்றாக இட்டு மிதமான தீயில், அரைவேக்காட்டில் பொரித்தெடுக்கவும். அதிகமான நேரம் எண்ணெயில் இருக்கவிட வேண்டாம்.
பின் அதே எண்ணெயில் (எண்ணெய் அதிகம் என்றால் கொஞ்சம் எண்ணெயை எடுத்து விடலாம்) பட்டை, கிராம்பு தாளித்த பின், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வரும்போது, மீதமிருக்கும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். சற்றே வதங்கியவுடன், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்க்கவும். பின் கோழித்துண்டங்களையும் அதில் போடவும். கோழியை வேகவைக்கத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தக்காளியையும் சேர்க்கவும். வாணலியை மூடி வைக்கவும். நடுநடுவில் கிளறி விடவும். இறக்குவதற்கு 5 நிமிடம் முன்னதாக கரம் மசாலா தூவி இறக்கவும்.
குறிப்புகள்:

தக்காளி வதக்காமல் காயோ, இறைச்சியோ வேகவைக்கும் நேரத்தில் சேர்த்தால், நிறமும் சுவையும் சற்றுக் கூடுதலாக இருக்கும்.

கோழித்தொக்காக இருக்காமல், அடர்த்தியான மசாலாவுடன் வேண்டுவோர் சற்று முன்னதாக இறக்கிவிடலாம்.

கற்றுக் கொடுத்தது: தோழி ஃபெனில்டா

தக்காளிப் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3 சிறியது / 2 பெரியது (மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும்)
புளிக் கரைசல் - ஒரு சிறிய எலுமிச்சையளவு புளியின் கரைசல்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு, பெரிய பற்கள் - 10 (இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்)
மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
கொத்தமல்லிப் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவ



தாளிக்க:

எண்ணெய் (2 அல்லது 3 மேசைக்கரண்டி) கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம், சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை

(தாளிக்கும் வடகமும் பயன்படுத்தலாம்)

செய்முறை:

தக்காளியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அடித்துச் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் புளிக்கரைசல், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு- இவை அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானவுடன், கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம் தாளிக்க வேண்டும். பின்
வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துப் பொன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் அனைத்து பொருட்களும் கலந்த கரைசலை வாணலியில் இட வேண்டும். பச்சை வாசனை போகின்ற வரையில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும



கற்றுக் கொடுத்தது : தோழி ஷோபா.

Sunday, March 21, 2010

மையலுடன் சமையல்

சமையல் என்ன பெரிய விஷயமா? செய்ய ஆரம்பிக்கும் வரை அப்படித்தான் தெரிந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது. ஆனால் போகப்போக மிகவும் இலகுவான ஒரு செயலாகிவிட்டது. புரியாத வரை புதிராக இருந்து புரிந்தவுடன் இவ்வளவுதானா என்றாகிவிடுகிற சில விஷயங்களுள் சமையலும் அடங்கும் என்று ஆரம்பத்தில் புரியவில்லை.

போகப்போகப் புரிந்தது. 0-9 வரை எண்களை வித விதமாக மாற்றியமைத்து பல புதிய எண்கள் உருவாக்குவது போல், அதை இப்படி ...இதை அப்படி..என்று மாற்றி மாற்றி முயற்சி செய்தால் சமையலும் சுலபமான ஒரு சவால்தான்.

கல்யாணம் முடிந்து, வழியனுப்பு படலம் முடிந்து, புகுந்த வீடு வரும் வரை சற்றே இது குறித்தும் கவலைப்பட்டதில்லை. திடீரென்று ஓடி வந்த பயமும் 'பயப்பாடாதே. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை' என்று அனைவரும் கூறியதும் சற்றே பம்மிக் கொள்ள எப்போது யாரோ ஒருவர் தயவில் வயிறு வளர்த்தே பழகிப்போனது. தனியாய் குடித்தனம் வந்த போதுதான் சமையல் பெரிய விஷயம் என்று தோன்ற ஆரம்பித்தது. இப்போது அந்தப் பயமெல்லாம் போன இடம் தெரியவில்லை.

வாய்க்கு ருசி என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனைவருக்கும் சமையலில் மையல் இல்லாமல் போகாது. பிடிக்காமல் செய்ய ஆரம்பித்த விஷயம். இன்றளவும் பெரிதாக ஆர்வமில்லாத ஒரு விஷயம். இருந்தாலும் எனக்குத் தெரிந்ததைப் பதிய வேண்டுமென்றா ஆர்வம். பின்னொரு நாளில், என் மகளுக்கோ, பேத்திக்கோ  ஏன் பேரனுக்கோ கூட உபயோகப்படும் என்று நியாயமான / அநியாயமான ஒரு நம்பிக்கை. நான் பட்ட அவஸ்தை அவர்களும் படக்கூடாது என்பதற்காக....ஏதாவது ஒரு சமையற்குறிப்பு கைவசம் இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்குமே என்பதற்காகவும், எனக்குத் தெரிந்ததை, நான் அங்கே இங்கே கற்று முயல்வதைப் பதியும் நோக்கமாகவே இந்த வலைப்பூ.