Tuesday, October 18, 2011

கல கலா / சுருள்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 200 கிராம்
வெண்ணெய்- 1 தேக்கரண்டி
சீனி - 1/4 கோப்பை
தேங்காய்ப்பால்(கெட்டியானது) - 1/4 கோப்பை
உப்பு - 1/4 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 250 மிலி.
பற்கள் அகலமான சீப்பு(புதியது)
அல்லது முட்கரண்டி (fork)    - 1

செய்முறை:

  • மைதா மாவுடன் உப்பு, சீனி, வெண்ணெய், தேங்காய்ப்பால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசையவும்.
  • சுமார் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • 3 மணி நேரம் போனதும், மாவு சற்று மென்மையாக இருக்கும்.
  • சிறிய சிறிய உருண்டைகளாக (சிறிய கோலிக்குண்டு அளவில்) உருட்டிக் கொள்ளவும்.
  • சீப்பு, அல்லது முட்கரண்டியின் பின் இந்த உருண்டையை வைத்து மெதுவாக ஒரு பக்கமாக அழுத்தி இழுக்கவும்.
  • பின் அதைக் கையில் எடுத்து இடது கை ஆட்காட்டி விரலின் நுனியில் சுருட்டவும்.
  • இரண்டு முனைகளையும் சேர்த்து மெதுவாக அழுத்தவும்.


 

  • பின் நடுவில் ஒட்டா வண்ணம் கவனமாக அதை எடுத்துத் தட்டில் வைக்கவும்.
  • எல்லா உருண்டைகளையும் சுருளாகச் செய்து கொள்ளவும்.


  • வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் இச்சுருள்களை கொஞ்ச்ம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

  • இன்னொரு பாத்திரத்தில் சீனியுடன் 2 - 3 மேசைக்கரண்டி மட்டுமே தண்ணீர் கலந்துஅடுப்பில் வைக்கவும்.
  • சீனி கரையும் வரை நன்கு கிளறவும்.
  • சீனிப்பாகு நன்கு சூடேறி நிறம் பழுப்பு வெள்ளையாக மாறும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • பொரித்தெடுத்த சுருள்களை அப்பாத்திரத்தில் போட்டு சீனிப்பாகுடன் நன்கு கலக்கவும்.
  • சூடாக இருக்கும் பாகு, சுருளைச் சுற்றி எளிதாகப் பற்றிப் பூத்து நிற்கும். 


கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

Sunday, October 16, 2011

புளி மிளகாய்

தேவையான பொருட்கள்:

வெள்ளை மிளகாய் - 150 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 கோப்பை
சமையல் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு



செய்முறை:
  • வாணலியைக் காய வைத்து வெந்தயம் வறுத்தெடுக்கவும். பின் அதைப் பொடி செய்து வைக்கவும்.
  • வாணலியில் சமையல் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளிக்கவும்.
  • காம்புகள் கிள்ளிய வெள்ளை மிளகாயைச் சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • மிளகாய்த்துண்டுகளை எண்ணெயில் போட்டுச் சிறு தீயில் வதக்கவும்.
  • சுருள வதங்கியதும், கெட்டியான புளிக்கரைசலைச் சேர்த்துக் கிளறிவிடவும்.
  • உப்பு, மஞ்சள் பொடி, பொடித்த வெந்தயம் சேர்த்துக் கிளறவும்.
  • பச்சை வாசம் போனதும், நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:


  • வெல்லத்தின் சுவை புளியுடன் ரசிப்பவர்கள் சிறிதுவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • செய்தவுடன் இருப்பதைவிட, ஊற ஊறச் சுவை அதிகமாகும்.
  • வெள்ளை மிளகாய்க்குப் பதிலாக, பச்சை மிளகாயும் உபயோகிக்கலாம்.
கற்றுக் கொடுத்தது: தோழியின் வீட்டில் பள்ளிக்காலத்தில் சுவைத்த நினைவு + இணையம்... இவை தந்த தைரியத்தில் சொந்தமான முயற்சி