Saturday, May 29, 2010

ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி - 250 கிராம்
இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 மேசைக்க்ரண்டி
எண்ணெய் - 3/4 கோப்பை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கறியைச் சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
  • அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவி எடுக்கவும்.
  • கறியுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பிசறிக் குக்கரில் முக்கால் வேக்காடு வேகவைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்தவுடன், கறித்துண்டுகளைச் சேர்த்து நன்கு வறுத்தெடுக்கவும்.
  • துண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்வரை வறுக்க வேண்டும்.
குறிப்பு:

  • இளங்கறியாக இருந்தால் அரை வேக்காடு போதும்.
  • காரம் அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் சற்றுத் தாரளமாக இருப்பதுதான் சுக்காவுக்கே சுவை.
  • கரம் மசாலா தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.
கற்றுக் கொடுத்தது - பத்மா, என் அம்மா

Saturday, May 15, 2010

கேரட் நிலக்கடலை வறுவல்

தேவையான பொருட்கள்:

கேரட் - 4
நிலக்கடலை - 1/2 கோப்பை (200 மி.லி.)
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
  • கேரட்டைச் சின்னச் சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலையை அரை வேக்காடு வேகவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கேரட்டைப் போட்டு வதக்கவும்.
  • கேரட்டின் நிறம் சற்றே மாறும் போது மிளகாய்பொடி, உப்பு சேர்க்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். (மூட வேண்டாம்.)
  • பின் கடலை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.


கற்றுக் கொடுத்தது: லக்ஷ்மி, தோழி

Thursday, May 6, 2010

துவரம்பருப்பு தோசை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 1/2 கோப்பை (200 மி.லி. கோப்பை)
பச்சரிசி - 1 கோப்பை
துவரம்பருப்பு - 3/4 கோப்பை
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
வற்றல் மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய், பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:

  • அரிசி, பருப்பை சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய் சேர்த்து இட்லி மாவு பக்குவத்திற்கு அரைக்கவும்.
  • கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து மாவில் சேர்க்கவும்.
  • கெட்டியாக இல்லாமல், மாவைத் தண்ணீராய்க் கரைத்துக் கொள்ளவும். (கோதுமை தோசை பதத்துக்கு)
  • தோசைக்கல் நன்றாகச் சூடேறிய பின், கோதுமை தோசை வார்ப்பது போல், கல்லின் விளிம்பிலிருந்து தோசை ஊற்றவும்.
  • மேற்பரப்பு நன்றாய்ச் சிவந்தவுடன், அடுத்த பக்கம் திருப்பிப் போடவும்.


குறிப்பு:

நல்ல முறுமுறு தோசை வேண்டுபவர்கள் மாவைத் தண்ணீராய்க் கரைத்துக் கொள்ளவும்.

அடை போன்ற கெட்டியான பக்குவத்தில் வேண்டுபவர்கள், மாவைச் சற்றுக் கெட்டியாகக் கரைக்கவும்.

வேண்டுமானால், 2 மேசைக்கரண்டி தேங்காய்த் துறுவல் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவை அரைத்தவுடன் சுட்டு விடலாம். புளிக்கவைக்கத் தேவையில்லை.
 
கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா,  என் அம்மா