Tuesday, October 16, 2012

சிவப்பு அரிசி இனிப்புப் புட்டு

தேவையான பொருட்கள்:

சிவப்புப் புட்டு அரிசி மாவு - 1/2 கோப்பை
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - சீனி - 6 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • புட்டு மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு உப்புக் கலந்த நீரைத் தெளித்துக் கட்டி தட்டாமல் பிசறிக் கொள்ளவும்.

  • பின் புட்டுப் பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் மாவு, பின் தேங்காய் என்று மாறி மாறிப் பரப்பவும்.






  • புட்டுப் பாத்திரத்தை மூடி, குக்கரில் வெய்ட் வைக்கும் இடத்தில் பொறுத்தவும்.
  • 5 நிமிடங்கள் நல்ல ஆவியில் வெந்ததும், இறக்கவும்.
  • அகலமான பாதிரத்தில், புட்டை இட்டு, அதனுடன், சர்க்கரை, நெய், சேர்த்துக் கிளறவும்.

  • மீண்டும் புட்டுப் பாத்திரத்தில் சற்றே இறுக்கமாக அழுத்தி வைத்து, ஒரு தட்டில் கவிழ்க்கவும்.

குறிப்பு:
  • வெள்ளை அரிசிப் புட்டுக்கும் இதே குறிப்புதான்.
  • தேவைப்படுமானால், ஏலக்காய்ப் பொடி, பொடித்த முந்திரி சேர்த்துக் கொள்ளலாம்.
  • குழாய்ப் புட்டு போலவே, தேங்காய்ச் சிரட்டையில் புட்டு செய்வதும் கேரள உணவின் சிறப்பம்சம். தேங்காய்ச் சிரட்டைக்குப் பதிலாக இப்பாத்திரம்.
  • வாழைப்பழத் துண்டுகள் சேர்த்துச் சாப்பிட்டால் அலாதி ருசி தரும்.
  • நெய் சேர்க்காமல், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிடாய் தொந்தரவுகள், இடுப்பு வலி உள்ளவர்கள், வயதுக்கு வந்த பெண்கள் முதலியோர்க்கு சக்தி தரும் உணவாகும் இது.
 

வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 1/2 கோப்பை
பாசிப்பருப்பு - 1/2 கோப்பை
மிளகு - 4 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 3 தேக்கரண்டி
நெய் - 1/2 கோப்பை
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • அரிசியைக் கழுவியபின், 6 கோப்பை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
  • பாசிப்பருப்பை வறுத்து, பெருங்காயம் சேர்த்து, சுமார் 10 நிமிடம் வேகவைக்கவும்.
  • அரிசி உருமாறிச் சாதம் ஆகத் தொடங்கும்போது பாசிப்பருப்பு, உப்பு சேர்க்கவும்.
  • துருவிய இஞ்சியில் 1 தேக்கரண்டி அரிசி, பருப்புடன் சேர்க்கவும்.
  • தீயைச் சிறிதாக வைத்து, மூடிவைத்து, அவ்வப்போது கிளறவும்.
  • தண்ணீர் அளவு குறைந்து, பொங்கல் முக்கால் பதத்தில் இருக்கும் போது, வாணலியில் 3 தேக்கரண்டி நெய் விட்டு, சூடானதும், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம், மீதமிருக்கும் இஞ்சித்துறுவல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரிசி பருப்புடன் சேர்த்துக் கிளறவும்.
  • நன்கு குழைந்து வெந்ததும், மீதமிருக்கும் நெய்யை ஊற்றிக் கிளறி, 2 அல்லது 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்துப் பின் இறக்கவும்.
  • நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.

குறிப்பு:
  • குக்கரில் வைக்கும்போது எல்லாவற்றையும் ஒரே நேரத்திலேயே வைத்து விடலாம்...தாளிப்பைத் தவிர...
  • குக்கரில் செய்வதை விட இந்த ருசி சிறப்பாக இருக்கும். அளவும் அதிகமாக வரும்.
  • காரம் சற்று அதிகமாக வேண்டுமென்றால், பச்சை மிளகாய் (அரிசி வேகும்போது) சேர்த்துக்கொள்ளலாம்.
  • அக்மார்க் ருசிக்கு இவ்வளவு நெய் தேவை..மற்றபடி ஆரோக்கியம் கருத்தில் கொண்டு குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்..

Tuesday, May 1, 2012

பாசிப்பருப்பு சாம்பார் (இட்லிக்கானது)

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு- 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பொடிக்க:

வற்றல் மிளகாய் - 3
கொத்தமல்லி விதை - 3 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய், கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், வற்றல் மிளகாய் - 1, பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:
  • பாசிப்பருப்பை, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • பொடிக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  • தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் பாசிப்பருப்பு, தண்ணீர், பொடித்த பொருட்கள் சேர்த்துக் கிளறிக் கொதிக்க விடவும்.
  • நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.  

குறிப்பு:

இட்லிக்கான சாம்பார்.....சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்...ஆனால் இட்லிக்கு மட்டுமே தனி ருசி...

கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

Sunday, April 15, 2012

கார எண்ணெய் அவரைக்காய்ப் பொரியல்

சைவ விருந்தினர்களுக்கென்று சிறப்பான சமையல் குறிப்புகளுள் இதுவும் ஒன்று.

செய்து பார்த்த பின் தோன்றியது: அவரைக்காயைக்  இப்படிக் காரமாய்ச் செய்ய முடியுமா?

தேவையான பொருட்கள்:

அவரைக்காய்  -200 கிராம்
சின்ன வெங்காயம் - சுமார் 15
தக்காளி - 1
பூண்டு - 2 பற்கள்
மல்லிப்பொடி - 2 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை
தாளிக்க - கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
  • வாணலியில் தாளிக்கும் அளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் சிறு துண்டாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
  • பின் மீதமிருக்கும் எண்ணெயை வாணலியில் சேர்த்துச் சற்றுச் சூடாக்கவும்.
  • நன்கு வதங்கியதும், மிகவும் பொடியாக நறுக்கிய அவரைக்காயைச் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
  • மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடவும்.
  • அவ்வப்போது கிளறிவிடவும்.
  • அவரைக்காய் நன்கு வெந்ததும், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறவும்.
  • அவரைக்காய் சுருள வரும்வரை வதக்கவும்.

    கற்றுக் கொடுத்தது: திருமதி மாணிக்கவல்லி அழகப்பன், தோழி

    Wednesday, April 11, 2012

    தேங்காய்த் துவையல்

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய்- 3/4 கோப்பை
    தோல் உளுத்தம்பருப்பு- 4 மேசைக்கரண்டி
    மிளகாய் வற்றல் - 10
    புளி - சிறிய எலுமிச்சை அளவில் முக்கால் பாகம்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:
    • வாணலியில் உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
    • பின் மிளகாயும் சேர்த்துச் சிறிது நேரம் வறுத்து இரண்டையும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
    • தேங்காயைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
    • ஊறவைத்த புளியுடன், உப்பு இவை அனைத்தையும் சேர்த்துக் கரகரப்பாகச் சிறிது தண்ணீரும் சேர்த்து அரைக்கவும்.

    குறிப்பு:
    • உதிரியாக வேண்டுமென்றால், தண்ணீர்  விடாமல் அரைக்கவும்.
    • தாளிக்கும் வெங்காய வடகம் பச்சையாக வறுக்காமல் கடைசியில் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றியும் இத்துவையல் அரைப்பதுண்டு.
    • அம்மியில் அரைத்தால் ருசியே தனிதான்..

      கற்றுக் கொடுத்தது: திருமதி பத்மா, அம்மா

    Monday, April 9, 2012

    மட்டன் பிரியாணி - அலுமினியம் ஃபாயில் தம் வைத்தது

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 300 கிராம்
    பிரியாணி அரிசி / பாசுமதி அரிசி / சீரகச் சம்பா அரிசி - 1 1/2 கோப்பை
    பெரிய வெங்காயம் - 2
    சின்ன வெங்காயம் - 4
    பச்சை மிளகாய் - 4
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
    பொடியாக நறுக்கிய் புதினா - 3 கைப்பிடி
    பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 கைப்பிடி
    மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
    மல்லிப்பொடி - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலாப்பொடி - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் பொடி- 1/4 தேக்கரண்டி
    தயிர் - 1 தேக்கரண்டி அல்லது எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி
    வெண்ணெய் - 3/4 தேக்கரண்டி
    எண்ணெய் - 4-5 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    பட்டை - 4 துண்டுகள்
    கிராம்பு - 4
    இலை - 3
    அன்னாசி மொக்கு - 1

    மட்டனில் உள்ள கொழுப்பை அகற்றும் முறை:

    நம் ஊரிலாவது கொழுப்பில்லாத கறி வாங்கி விடலாம். ஆனால், இங்கே ரியாத்தில் கொழுப்பில்லாத கறி கிடைப்பது அபூர்வம். அப்படிக் குறைவாகவே கொழுப்பு இருந்தாலும் கூட, அதை நீக்குவது அவசியம் என்பவர்களுக்காக இந்தக் குறிப்பு. மற்றபடி கொழுப்பு தேவைப்பட்டால், அப்படியே கழுவி எடுத்துக் கொள்ளலாம்.
    • கறித்துண்டுகளை நடுத்தர அளவில் துண்டுகளாக்கவும்.
    • 2 மேசைக்கரண்டி கோதுமை மாவு, 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி உப்பு, 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி சுமார் அரை மணி நேரம் வைக்கவும்.
    • பின் கழுவியெடுத்தால் கொழுப்பு தனியாகக் கழன்று வந்து விடும்.



    (கோழியையும் இப்படி மஞ்சள் & மாவால் குளிப்பாட்டி எடுத்தால், கொழுப்பும் கழன்று வரும்; பச்சை வாசமும் மறைந்து போகும்.)

    தாளிக்க &  வதக்க:
    • வாணலியில் வெண்ணெய் சேர்த்து, அது உருக ஆரம்பித்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
    • தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும்.
    • பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
    • எண்ணெய் பிரிந்து வரும்போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிந்து வரும் வர வதக்கவும்.
    • நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், சிறு துண்டுகளாக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும், வாணலியைக் கொஞ்சம் நேரம் மூடி வைத்தால் தக்காளி குழைந்து விடும்.
    • பின் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலாப்ப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கிளறவும்
    • எண்ணெய் பிரிந்து வரும்போது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
    • தட்டி வைத்த சின்ன வெங்காயமும் போட்டு வதக்கவும்
      ஒவ்வொரு பொருள் சேர்ப்பதற்கு முன்னும் எண்ணெய் பிரிந்து வருவதுதான் பிரியாணிக்கான முக்கிய குறிப்பு.


      குக்கரில் வேக வைக்கும் முறை:
      • வதக்கிய மசாலாவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும்.
      • ஒரு பகுதியை அப்படியே வைத்துவிட்டு, மறு பகுதியை நீர் வடிகட்டிய மட்டன் துண்டுகளுடன், மட்டனுக்கு மட்டும் தேவைப்படும் உப்பு சேர்த்து, தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, மட்டன் முக்கால் பத வேக்காடு வரும் வரை வேகவைக்கவும்.
      • (பிரியாணி இலைகளை குக்கரில் சேர்க்காமல் தனியே எடுத்து வைத்துள்ள மசாலாவில் சேர்க்கவும்.)
      • வெந்த, குக்கர் ஆவி அடங்கியதும், மட்டன் துண்டுகளைத் தனியே வடிகட்டி எடுக்கவும்.
      • எஞ்சியுள்ள தண்ணீரைச் சரியாக அளந்து கொள்ளவும்.
      அரிசி கழுவி வைக்கும் முறை:
      • அரிசியை நீரில் கழுவி, வடிகட்டி, சுமார் 5 நிமிடங்கள் வைக்கவும்.
      தம் வைக்கும் முறை:
      • அடி கனமான பாத்திரத்தில் (நான் ஸ்டிக் பாத்திரமும் உகந்ததே) 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, வடித்து வைத்து அரிசியைச் சுமார் 1 நிமிடம் வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
      • பின் மட்டனில் வடிகட்டிய நீருடன் சேர்த்து 3 கோப்பை நீர் அளந்து பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
      • கொதி நன்கு வந்ததும், அரிசி, வெந்த மட்டன் மற்றும் மீதமிருக்கும் மசாலா சேர்த்துக் கிளறவும்.
      • தேவையான உப்பு சேர்க்கவும்.
      • தயிர் அல்லது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்துக் கிளறவும்.
      • தண்ணீர் பாதியளவு வற்றிவிடும் நிலையில், அலுமினியம் ஃபாயில் போட்டு வைத்து, மூடி கொண்டு மூடி வைக்கவும். (இது எரியும் கரித்துண்டுகள் வைத்திடாத  தம்.)




      • தேவைப்பட்டால் அலுமினியம் ஃபாயிலை எடுத்து, நடுவில் கிளறிப் பின் மறுபடியும் மூடி தம் வைக்கலாம்.
      • சுமார் 7 - 10 நிமிடங்களில் பிரியாணி தயாராகிவிடும்.

      குறிப்பு:

      • ஏலக்காய் வாசனை விரும்புபவர்கள், தாளிக்கையில் சேர்த்துக் கொள்ளலாம்.
      • இதில் கூறப்பட்டுள்ளது மிதமான காரம்; தேவைப்பட்டால் பச்சை மிளகாய் மற்றும் மிளகாய்ப்பொடி இன்னும் சேர்த்துக் கொள்ளலாம்.
      கற்றுக் கொடுத்தது: பலரிடமிருந்து நான் கற்ற, ஒவ்வொருவரிடமும் ஒன்றைப் பின்பற்றிய முஷக்கல் குறிப்பு

      Saturday, March 31, 2012

      எண்ணெய்க் கத்தரிக்காய்க் குழம்பு

      தேவையான பொருட்கள்:

      கத்தரிக்காய் - 8
      வெங்காயம் - 1
      தக்காளி - 1
      பூண்டு - 4 பற்கள்
      சீரகம் - 1/2 தேக்கரண்டி#
      கெட்டியான புளிக்கரைசல் - 1/2 கோப்பை
      மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
      மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
      மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
      துருவிய தேங்காய் 3/4 கோப்பை
      தாளிக்க: கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை
      எண்ணெய் - 1/4 கோப்பை
      உப்பு - தேவையான அளவு

      செய்முறை:

      • கத்தரிக்காய் நுனிகளை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
      • வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
      • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
      • சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
      • பின் மீதமுள்ள எண்ணெய் மொத்தம் சேர்க்கவும்.
      • கத்தரிக்காய்களைச் சேர்த்து, பிரவுன் கலர் நிறம் வரும்வரை வதக்கவும்.
      • புளிக்கரைசலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கி, வாணலியில் ஊற்றி மூடவும்.
      • தேங்காய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
      • கத்தரிக்காய் நன்றாக வெந்ததும், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.
      • ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


      கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா